மொட்டைமாடியில் காய்கறித் தோட்டம்!

மாடித்தோட்டம் என்பது நமது மொட்டை மாடியில், நமக்கு பலன்தரக்கூடிய செடிகளை வளர்ப்பதேயாகும். இதில் காய்கறி, கீரைகள், சில வகைப் பழச்செடிகள், மலர்ச்செடிகள், மூலிகைச் செடிகள் அழகு தாவரங்கள் ஆகியவற்றை வளர்க்கலாம்.


பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள வேளாண் அறிவியல் மைய தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் ஜெ. கதிரவன், மாடித் தோட்டம் அமைக்கும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து கூறியது:

கலன்கள்:

அதிக செலவில்லாமல் நாம் வீட்டுக்கு வாங்கக்கூடிய அரிசி சாக்கு, கோதுமை பாக்கெட் போன்றவற்றை பயன்படுத்தலாம். இவற்றின் ஆயுள் 2 ஆண்டுகள் வரை இருக்கும்.

பிளாஸ்டிக் வாளி, பெயிண்ட் பக்கெட், பொங்கல் வைத்த மண்பானை ஆகியவற்றை பயன்படுத்துகையில், அவை அதிக காலம் பயன்படுத்தத்தக்க வகையில் இருக்கும். மாடித்தோட்டம் பிரபலமாகி வருவதால், செடிகளை வளர்ப்பதற்கான பைகள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன.

அவற்றில் கீரைகளை வளர்ப்பதற்கு உயரம் குறைந்த, நீளம் மற்றும் அகலம் அதிகமான பைகளை பயன்படுத்தலாம். வெண்டை, கத்தரி போன்ற அதிக ஆழம் வேர் செல்லக்கூடிய பயிர்களுக்கு உயரம் அதிகம் உள்ள பைகளும், மிளகாய், அவரை போன்ற சற்றே குறைவான ஆழம் வரை வேர் செல்லக்கூடிய பயிர்களுக்கு குறைவான உயரம் உள்ள பைகளும் பயன்படுத்தலாம்.

பப்பாளி, எலுமிச்சை, மாதுளை ஆகிய பழ மரங்களையும் வளர்க்க முடியும். இதற்கு உயரம் அதிகம் உள்ள பேரல் போன்ற கலன்களைப் பயன்படுத்தலாம். எந்த வகையான கலனாக இருந்தாலும், அவற்றில் நீர் வெளியேறுவதற்கான துவாரங்கள் அவசியம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கலனிலிருந்து வெளியேறும் நீரானது மாடியின் தளத்தை ஈரமாக்கி பாதிப்பு ஏற்படாமலிருக்க, கீழே பழைய பேனர்களை விரித்து அதன்மீது கலன்களை வரிசையாக அடுக்கி வைத்து விதைப்பு செய்யலாம்.

வளர் ஊடகம்:

செடிகள் நன்கு வளர்ந்து நல்ல மகசூல் கொடுப்பதற்கு சத்தான வளர் ஊடகம் அவசியமாகிறது. இதற்கு மண், தென்னை நார் மட்கு, மண்புழு உரம் ஆகியவற்றை பயன்படுத்தலாம். கற்களற்ற செம்மண், கருமண் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

தென்னை நார் மட்கு எடை குறைவாகவும், அதிக நீர்ப்பிடிப்புத் தன்மை கொண்டதாகவும் இருக்கும். இவற்றை கலந்து பயன்படுத்துகையில் நீரை உறிஞ்சி தக்க வைத்துக்கொண்டு மெதுவாக பயிருக்கு அளிக்கும். மேலும், தென்னைநார் மட்கு மாடிக்கு எடுத்துச்செல்வதற்கு சுலபமாகவும் மாடியில் அதிக பாரம் ஏறாமல் இருக்கவும் வசதியாக இருக்கும்.

பயிரின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகள் கிடைப்பதற்கு மண்புழு உரத்தைப் பயன்படுத்தலாம்.

கீரைகள், செடிகள் மற்றும் கொடி வகைகளுக்கு மண், தென்னை நார் மட்கு மற்றும் மண்புழு உரத்தை 1:1:1 என்ற வீதத்திலும், மரங்களுக்கு 2:1:1 என்ற வீதத்திலும் கலந்து கொள்ளலாம்.

அறுவடை முடிந்து செடிகளைப் பிடுங்கி எறிந்த பிறகு, இந்த மண் கலவையை மாடியில் கொட்டி சூரிய ஒளியில் நன்கு காயவிட்டு பின்னர் அதனுடன் மீண்டும் தென்னை நார் மட்கு, மண்புழு உரம் ஆகியவற்றைக் கலந்து மீண்டும் பயன்படுத்தலாம்.


மண் கலவையில் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியாவை கலப்பதன் மூலம் பயிர்களுக்கு இயற்கையாக சத்துக்களை எடுத்துக்கொள்ளும் தன்மை கிடைக்கிறது. உயிரிக் கட்டுப்பாட்டுப் பொருள்களான டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனாஸ் புரசன்ஸ் போன்றவற்றை மண் கலவையுடன் சேர்த்து கலப்பதன் மூலம், நோய்க்கிருமிகள் மண் கலவையில் பெருகாத வகையில் தடை செய்யமுடியும்.

1 அடி உயரம், 1 அடி அகலம் உள்ள கலுனுக்கு உயிர் உரங்கள் மற்றும் உயிரிக்கட்டுப்பாட்டுப் பொருள்கள் முறையே 1 கிராம் அளித்தால் போதுமானது.

செடிகள் தேர்வு:

பொதுவாக, அனைத்து வகையான காய்கறிப் பயிர்களையும் மாடித்தோட்டத்தில் வளர்க்கலாம் என்றபோதிலும், பருவ நிலைக்கேற்ப சில காய்கறிகளைத் தேர்வு செய்வது நல்லது. கீரைகள், முள்ளங்கி, வெங்காயம், மிளகாய், கத்தரி, வெண்டை போன்றவற்றை மாடித் தோட்டத்தில் எந்த பருவத்திலும் பயிரிடலாம்.

அதிக மழை மற்றும் வெயில் இருக்கக்கூடிய பருவங்களில் தக்காளி மகசூல் குறைவாக இருக்கும். செடி அவரை, முட்டைக்கோசு, காலிபிளவர், கேரட், பீட்ரூட் ஆகியவற்றை குளிர்காலங்களில் பயிரிடலாம். சூரிய ஒளியின் தாக்கம் அதிகமாக இருக்கும்பட்சத்தில், நிழல்வலை அமைத்து செடிகளைப் பாதுகாக்கலாம்.

மாடித் தோட்டத்தில் வளர்ப்பதற்கு வீரிய கலப்பினங்களைத் தேர்வு செய்யாமல், சாதாரண ரகங்களைத் தேர்ந்தெடுப்பதே சாலச்சிறந்தது. இவற்றில் பூச்சி நோய்களின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும்.

ஊட்டமளித்தல்: மண்புழு உரம் கலந்ததன் மூலம் பயிருக்கு சத்துக்கள் கிடைக்கும். செடிகள் வளர்ச்சியடைந்த பின்னரும், மீண்டும் மண்புழு உரத்தை கலன்களில் இட்டு கிளறிவிட வேண்டும். மழை அதிகம் பெய்திருந்தாலும், கலனில் உள்ள சத்துக்கள் அதிகம் கரைந்து சென்றிருக்கும்.

அந்த சமயத்திலும் மீண்டும் மண்புழு உரத்தை அளிக்க வேண்டும். வேப்பம் பிண்ணாக்கு, ஆமணக்கு பிண்ணாக்கு, கடலைப் பிண்ணாக்கு ஆகியவற்றை பொடி செய்து இடுவதன் மூலம் பயிருக்கு சத்துக்கள் கிடைக்கும்.

இயற்கை வளர்ச்சி ஊக்கியான பஞ்சகாவ்யாவை 15 நாள்களுக்கு ஒரு முறை 1 லிட்டர் நீருக்கு 25 மி.லி வீதம் கலந்து தெளிப்பதன் மூலம், செடிகள் வாளிப்பான வளர்ச்சி பெற்று அதிக பூக்கள் மற்றும் காய்கள் உற்பத்தியாகும்.

பயிர் பாதுகாப்பு:

மொட்டை மாடியில் செடிகள் வளர்க்கும்பட்சத்தில் சில வகையான பூச்சிகள் மற்றும் நோய்கள் பயிரைத் தாக்கி சேதத்தை ஏற்படுத்தும். பூச்சி நோய் பாதிப்புக்குள்ளான செடிகள் குன்றிய வளர்ச்சி, இலைகள் சுருங்குதல், மஞ்சள் நிற இலைகள், பழுப்புநிற புள்ளிகள், வாடல், பூ மற்றும் பிஞ்சு உதிர்தல் உள்ளிட்ட அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

அவ்வாறு தென்படும்பட்சத்தில் பிரச்னை என்னவென்பதை அறிந்து தக்க பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். பூச்சிகளைப் பொறுத்தவகையில், மாவுப்பூச்சி, அசுவினி, இலைப்பேன், வெள்ளை ஈ, செதில் பூச்சி ஆகிய சாறு உறிஞ்சக்கூடிய பூச்சிகளும், காய்புழு போன்ற புழுக்களும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்த சிகைக்காய் காய்களை 1 லிட்டர் நீரில் 50 கிராம் என்ற அளவில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் வடிகட்டி செடிகளின் மீது தெளிக்கலாம். அசுவினி, பேன் போன்றவற்றைக் கட்டுப்படுத்த இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை முறையே 50 கிராம் அளவில் நன்கு அரைத்து, 1 லிட்டர் நீரில் கலந்து வடிகட்டி பின்னர் செடிகளின் மீது தெளிக்கலாம்.

செடிகளில் வரும் எறும்புகளைக் கட்டுப்படுத்த மஞ்சள் பொடியை நீரில் கலந்து தெளிக்கலாம்.
வெள்ளை ஈ, தத்துப்பூச்சி போன்றவற்றை கட்டுப்படுத்த வேப்பம்கொட்டையை இடித்து நீரில் ஊற வைத்து அக்கரைசலை வடிகட்டி தெளிக்கலாம். அல்லது, வேப்ப எண்ணெயை நீரில் கலந்து தெளிக்கலாம். வேப்ப எண்ணெய் நீரில் கலப்பதற்கு காதி சோப்புக் கரைசலை அதனுடன் சேர்த்துக் கொள்ளலாம். புழுக்கள் தென்படும் பட்சத்தில் அவற்றை கைகளாலேயே நசுக்கி அழித்து விடலாம். வேப்பம் எண்ணெய் பயன்படுத்தியும் புழுக்களை கட்டுப்படுத்தலாம்.

நோய்களைப் பொருத்தமட்டில், சாம்பல் நோய், வேரழுகல், கழுத்தழுகல், இலைப்புள்ளி, வாடல் போன்ற நோய்கள் ஏற்படும். முறையான ஊட்டச்சத்து நிர்வாகம், போதிய அளவு சூரிய ஒளி, தூய்மையான கலன்களைப் பயன்படுத்தல் போன்றவற்றின் மூலம் நோய்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

இலைகளில் தோன்றக்கூடிய நோய்களைக் கட்டுப்படுத்த வசம்பு 1 லிட்டர் நீருக்கு 50 கிராம் அளவில் இரவு முழுவதும் ஊறவைத்து வடிகட்டி அக்கரைசலைத் தெளிக்கலாம். வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த சீகைக்காய் காய்களை 1 லிட்டர் நீருக்கு 50 கிராம் என்ற அளவில் ஊறவைத்து, வடிகட்டிய நீரை செடிகளின் வேர்பாகம் நனையுமாறு ஊற்றலாம்.

நீர்ப்பாசனம்:

மழைக்காலம் தவிர்த்த இதர நாள்களில் தினந்தோறும் செடிகளுக்கு நீரூற்றுவது அவசியம். பூவாளி கொண்டோ, குவளை கொண்டோ செடிகளின் வளர்ச்சிப் பருவத்திற்கேற்ப தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
நன்றி: தினமணி

மாடித் தோட்டத் தாவரங்கள்: பாதுகாக்க சில குறிப்புகள்!

1. செடிகளுக்குச் சாணியைக் கரைத்து ஊற்ற வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு கை சாணிக்கு 20 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஊற்ற வேண்டும். கெட்டியாக ஊற்றினால் எறும்புகள் வரும்.

2. அடுத்த பிரச்சினை வெள்ளை அசுவினிப் பூச்சி. இதற்கு அடிப்படையான காரணம் அதிக நீர் / அதிக வறட்சியுடன் சத்தற்ற மண். நோய் எதிர்க்கும் ஆற்றல் குறைவும் காரணமாக இருக்கலாம்.

இலைகளை நுனிக் கிளையுடன் கவாத்து செய்து, பின் வேருக்கு மண்புழு உரத்துடன் பஞ்சகவ்யம், குணபரசம், மோர் போன்றவற்றில் ஒன்றை வழங்கி, மேலே பூச்சிவிரட்டி தெளிக்கவும். புதுத் தளிர் வரும். ஒரு வாரத்தில் பூக்கும். முயற்சி பலிக்காவிட்டால் செடியைப் பிடுங்கிவிட்டு, நன்கு மண் காய்ந்த பின் வேறு விதை போடவும்.

சாதாரணமாக இந்தப் பிரச்சினை கத்திரி – வெண்டைக்கு ஏற்படும். கவாத்து செய்தால் புதுத் தளிர் வரும். முற்றிய பெரு இலைகளையும், பழுத்த இலைகளையும் தினம் நீக்கினால் நோய் வராது.

3. புதுப் பயிரிடுதலை ஜூலை – ஆகஸ்டில் தொடங்கவும். சித்திரை – வைகாசிப் பட்டத்தில் காராமணி, அகத்தி, முருங்கை தவிர, வேறு பயிர்கள் வராது. எனினும் மாடியில் பசுமை வலை அடித்தால் தாவரங்களை ஓரளவு காப்பாற்றலாம். முட்டைக்கோஸ், முள்ளங்கி, காரட், காலிஃபிளவர், லெட்யூஸ் போன்ற ஆங்கிலக் காய்கறிகள் பசுமை வலைக்குள் சிறப்பாக வளரும்; தக்காளியும் சிறப்பாக வளரும். நாட்டுக் காய்கறிகளான கத்திரி, வெண்டை, அவரை, புடல், கீரைகளுக்கு நேரடியான சூரிய ஒளி ஜூலை – மார்ச் வரை கிட்டும். ஏப்ரல் – ஜூனில் மரப் பயிர்களும் காராமணியும் கோவையும் வளரும்.

4. கொடிப் பயிர்களில் கோவை நீண்ட நாட்களுக்குப் பலன் தரும். புடலை, பீர்க்கை, அவரைப் போன்றவற்றுக்கு 3, 4 மாதங்களுக்குப் பின் புதிய விதை நட வேண்டும். கோவை 10 ஆண்டுகள் வரை பலன் தரும். இயற்கை வழியில் 15 ஆண்டுகள்கூடப் பலன் தரும். அவ்வப்போது காய்ந்த பாகங்களைக் கட்டாயம் கவாத்து செய்ய வேண்டும். இது களைபோல் மண்டும் கசப்புக் கோவை அல்ல; அதைச் சமைக்க முடியாது. கறிக்கோவை வெள்ளரிக்காய்போல் ருசிக்கும்; பச்சையாகவே உண்ணலாம்.

5. பயிர்களுக்கு நீர் ஊற்றும்போது மண் காய்ந்த பின் ஊற்ற வேண்டும். நீர் வடிகிறதா என்று கவனிக்கவும். ஈரம் காப்பது அவசியம். ரசப்பதத்தில் – பஞ்சகவ்யம், சாணிக் கரைசல் ஆகியவற்றைத் தினமும் வேரில் ஊற்றலாம். வசதிப்படி வாரம் மூன்று நாளைக்குக்கூட ஊற்றலாம். களை- பசுமைச் செடி- இலை ஊறலில் நீர் கலந்து, அவ்வப்போது ஊற்றலாம்.

6. செடிகள் வளர்க்க அரிசி / சிமெண்ட் பாலித்தீன் பைகள் ஆறு மாதங்கள் தாங்கும். பின்னர், பழைய சட்டை, புடவை, வேட்டி ஆகியவற்றால் சுற்றிக் கட்டிவிடலாம். பிளாஸ்டிக்கும் வெயிலில் பதமாகி உடைந்து நொறுங்கும். அதன் மீது துணியால் போர்த்தலாம். இரண்டு ஆண்டுவரை தாங்கும். பின்னர் பயிர் அழிந்தவுடன் புதிய பையில் மண்ணைப் போடலாம். இயற்கை உரம் இடுவதால் மண்ணில் சத்து இருக்கும். புல் வேர் மண்டினால் அப்படியே தொட்டியைக் கவிழ்த்து வேர்களை நீக்கிவிட்டு, அதே மண்ணுடன் மண்புழு உரத்தை இட்டுப் புதிய பயிர் எழுப்ப வேண்டும்.

7. கூடியவரை நாம் வளர்க்கும் பயிர்களுக்கு நோய்களைத் தாங்கி வாழக்கூடிய பண்பை ஊட்ட வேண்டும்.

"காய்ந்த மாட்டுச் சாணம் மற்றும் வீட்டு சமையலறையில் மீதமாகும் காய்கறிக் கழிவுகள்தான் உரம்".

நன்றி: மாடித் தோட்டம் 77 + வயதினிலே,ஆர்.எஸ். நாராயணன், யுனீக் மீடியா இன்டக்ரேட்டர்ஸ்,